(இ - ள்.) திருமகிழ் அலங்கல் மார்பன் - திருமகள் மகிழ்ந்து வதிகின்ற மாலையணிந்த மார்பினையுடைய, செங்கணான் - சிவந்த கண்களையுடைய திவிட்ட மன்னன வணங்க - தன் அடிகளிலே வணங்கா நிற்ப, செல்வப்பெருமகிழ்வு எய்தி - செல்வமுடைமை காரணமாகப் பெரியதொரு மகிழ்ச்சியையடைந்து, வேந்தன் பிரசாபதி - பயாபதி மன்னன், பெரிய வாட்கண் உரிமையொடு இருந்தபோழ்தின் - பெரிய வாள் போலும் கண்களுடைய உரிமைத் தேவியோடு வீற்றிருந்த அமையத்தே, அருமைகொள் திகிரியாள்வோன் - பெறற்கரிய ஆழிப்படையை யுடைய திவிட்டனுடைய, சிறுவர் - இளமகார்கள், ஒலிகலன் ஒலிப்ப வோடி சென்று - கிண்கிணி முதலிய ஒலிக்கும் அணிகலன்கள் ஆரவாரிக்கும்படி ஓடிப் போய், அணுகினாரே - அப்பயாபதி வேந்தனை அடைந்தனர். (எ - று.)சிறுவர் என்றது விசயனையும் சோதிமாலையும், செங்கணான் வணங்க. மகிழ்வெய்திப் பயாபதி உரிமையோடிருந்த போழ்து, திகிரி யான் செல்வர் ஒலிப்ப, ஓடி அணுகினார் என்க |