பயாபதி இம்மையில் மாபெரும் சிறப்பீந்த தவத்திற்கு
மேலும் வித்திடல் வேண்டும் எனல

1842. ஆங்கவ ரணைந்த போழ்தி
     னிமிர்துகொப் புளித்த போலும்
தேங்கமழ் பவழச் செவ்வாய்
     முறுவனீர் பருகித் தேங்கி
ஈங்கிவை யனைய தோற்றி
     ணின்பமே 1பெருக நின்ற
வீங்கிய தவத்திற் கின்னும்
     வித்திடற் பால தென்றான்.
     (இ - ள்.) ஆங்கு அவர் அணைந்த போழதில்- அவ்வாறு அம்மக்கள் தன்னை வந்து
அணுகிய பொழுது, தேங்கமழ் பவழச் செவ்வாய் - தேன்மணங் கமழும் பவழம் போன்ற
சிவந்த வாயின்கண் ஊறுதலுடைய, முறுவல் நீர் பருகி - நகையுடனே கூடிய ஊறலாகிய
நீரை மாந்தி, தேங்கி - இன்ப மிக்கு, ஈங்கு இவையனைய தோற்றி - இவ்வுலகத்தே இச்
செயல்போன்ற செயல்கள் பலவற்றை நிகழ்வித்து, இன்பமே பெருக நின்ற - பேரின்பம்
மிகும்படி முற்பிறப்பிற் செய்து நின்ற, வீங்கிய தவத்திற்கு இன்னும் - பெருகிய
தவவொழுக்கத்திற்கு இனிமேலும், வித்து இடற்பாலது - விதை வித்தற்பாற்று, என்றான் -
என்று கூறினான், (எ - று.)

     இத்தகைய பேரின்பம் மறுமையிலும் நமக்கு வேண்டுமாயின் அவ்விளைவிற்கு
வித்தாகிய தவவொழுக்கம் இம்மையின் மேற்கொள்ளற் பாற்று என்றபடி.

     இம்மையில் தான் எய்தும் இன்பமெல்லாம் முற்பிறப்பிற் றான் ஆற்றிய தவத்தின்
பயனே என்பான், “ஈங்கு இவையனைய தோற்றிÓ என்றான். இன்பமே விரும்புதல்
உயிரியற்கையாகலின் அதனைத் தரும் தவத்திற்கு வித்திடலே அறிவுடைமை என்பான்,
இன்னும் வித்திடற்பால தென்றான், என்க.

(712)