வேறு

அரசன் கோயில் வாயிலையடைதல்

185. இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்
1கன்னவி றிருமணிக் கபாடந் தாழுறீஇ
முன்னிய திருநகர் முற்ற முன்னினான்.

    (இ - ள்.) ஏந்தல் - அரசனானவன்; இன்னணம் இறைவனை ஏத்தி - இவ்வாறு
அருகக்கடவுளைப் போற்றி; தன் சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன் - தனது முடியில்
அணிந்துகொண்ட எஞ்சிய மலர்களையுடைய வனாய்; கல்நவில் திருவணிக் கபாடம்
தாழ்உறீஇ - மணிகள் பதிக்கப்பெற்ற வையும் ஒலிக்கும் அழகிய மணிகளமைத்தவையுமான
கோயிற் கதவுகளைச் சாத்தித் தாளிட்டு; முன்னிய திருநகர் முற்றம் முன்னினான் - எண்ணி
வழிபட்ட திருக்கோயிலின் முன்னிடத்தை யடைந்தான், (எ - று.)

     சேடப்பூ - கடவுள் அடிகளில் பூசித்த பின் அக்கடவுளின் அருட் பொருளாகப்
பெற்றுக்கொள்ளும் பூ; இதனை நிர்மாலியம் என்பர். அரசன் கடவுள் வழிபாட்டை
முடித்துக்கொண்டு திருக்கோவிலைப் பூட்டிக்கொள்ளு மாறு செய்து வெளிப்பட்டனன் என்க.

( 67 )