இதுவுமது

சிறந்த செல்வத்திற்கு ஊனம் யாதெனல்

1853. மலைபயில் 1களிநல் யானை
     மன்னரால் வவ்வ லின்றாய்க்
கலைபயில் மகளிர் கண்போற்
     கள்வர்கைப் படாது நாளும்
நிலையின செல்வக் கூன
     2நிகழ்வன வுரைமி னென்றான்
இலைபயின் மகரப் பைம்பூ
     ணெரிமணிக் கடகக் கையான்.
(இ - ள்.) மலை பயில் - மலையிடத்தே வழங்குதலையுடைய, களி நல்யானை -
மதக்களிப்புடைய நல்ல யானைகளையுடைய, மன்னரால் - பகை வேந்தர்களால், வவ்வல்
இன்றாய் - கவரப்படாததாய், கலைபயில் மகளிர் கண்போல் - ஆடல் முதலிய
கலைபயிலுதலையுடைய கணிகை மகளிருடைய கண்களைப் போன்ற, கள்வர் கைப்படாது -
களவு செய்வோருடைய கைகளிலும் அகப்படாததாய், நாளும் நிலையின செல்வக்கு -
எப்பொழுதும் நிலைபெற்றுடைய செல்வத்திற்கு, ஊனம் நிகழ்வன உரைமின் என்றான் -
இவற்றின் வெறாய் நிகழும் கேடு உளவாயில் கூறுங்கோள் என்றான், இலைபயில் மகரப்
பைம்பூண் எரிமணிக் கடகக் கையான் - இலைபோன்ற வடிவமுடைய தொழிற் சிறப்பமைந்த
மகரமீன் தலைவடிவிற்றாய முகப்பையுடைய பசிய பூணாகிய விளங்குகின்ற மணிகளாலியன்ற
கடகம் செறிந்த கைகளையுடைய பயாபதி மன்னன், (எ - று.)

ஆடலும் பாடலும் அழகும் காட்டி
.
     “செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்
     கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு
     பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
     வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிர்Ó (மணிமே.)

     என்பவாகலின், கலைபயில் மகளிர் கண்போல் கள்வர் என்றார்.

     செல்வக்கு - செல்வத்திற்கு. ஊனம் - கேடு.

     பகை மன்னராற் கவரப்படாததாய், கள்வர் கைப்படாது நிலைத்த செல்வத்திற்கு வேறு ஊனம் யாதுளது என்று வினவினான் என்க.

(723)