கூற்றத்தை மாற்ற யாம் அறிந்திலோம் எனல்

1857. பீழைமை பலவுஞ் செய்து
     பிணிப்படை பரப்பி வந்து
வாழுயிர்ப் 1பொழித்து வவ்வி
     வலிந்துயிர் வாங்கி யுண்ணும்
2கூழைமை பயின்ற கூற்ற
     வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி
பாழியந் தடக்கை வேந்தே
     பயின்றிலம் யாங்க ளென்றார்.
     (இ - ள்.) பீழைமை பலவும் செய்து - பல்வேறு இன்னல்களையும் இயற்றி,
பிணிப்படை பரப்பி - நோயாகிய பல்வேறு படைகளையும் பரப்பி, வந்து - ஆயுள்
முடிவிலே வந்து, வாழ் உயிர்ப்பு ஒழித்து - வாழ்தற்குக் காரணமான மூச்சையும் நிறுத்தி,
உயிர் வலிந்து வவ்வி வாங்கி - உயிரை வலிந்து பிடித்துக் கவர்ந்து, உண்ணும் -
குடிக்கின்ற, கூழைமை பயின்ற கூற்ற அரசனை - கயமைத் தொழிலில் வல்லவனாகிய மறலி
மன்னனை, குதிக்கும் சூழ்ச்சி - கடத்தற்குரிய சூழ்வினையை, பாழியம் தடக்கை வேந்தே -
வலியவாய அழகிய பெரிய கைகளையுடைய அரசனே, யாங்கள் பயின்றிலம் என்றார்-
யாங்கள் கற்றோமில்லை என்று கூறினர், (எ - று.)

கூழைமை - கயமை. கடமையுமாம்.

     “அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்
     கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் ‘கூழைமை’ செய்யாமே.Ó

     என்னும் பெரியாழ்வார் திருமொழியினும் கூழைமை இப்பொருட்டாதல் காண்க. பிணிகளாலே சாதல் நேருதலின் கூற்றனுக்குப் பிணிகளைப் படையாக உருவகித்தார்,

 குதித்தல் - கடத்தல்,

     ‘கூற்றங் குதித்தலும்’ என்னும் திருக்குறளினும் இஃது ‘இப்பொருட்டாதல்’ காண்க, கூற்றத்தை மாற்றும் சூழ்ச்சி யாங்கள் பயின்றிலம் என்றார் என்க.

(727)