1859. | அருங்களி யானை வேந்தே யத்துணைப் பாணி யுண்டோ கருங்களி மதநல் யானை வாய்புகு கவள மேபோல் பெருங்களி யாளன் காலன் பிறையெயி றணிந்து நின்ற இருங்களி யாணர் வாழ்விற் கிமைப்பிடை பெரிது கண்டாய். | (இ - ள்.) அருங்களி யானை வேந்தே - அணுகுதற்கரிய மதக் களிப்பையுடைய யானையை உடைய அரசே, அத்துணைப் பாணியுண்டோ - அவ்வளவு கால விடையீடுதானும் உளதேயோ, கருங்களி மதநல் யானை - கரிய களிப்பையுடைய மதநீர் பொழியும் நல்ல யானையினுடைய, வாய்புகு கவளமேபோல் - வாயிடத்தே புகுதலையுடைய கவளத்தைப் போன்று, பெருங் களியாளன் காலன் - மிக்க களிப்பையுடைய மறலியின், பிறை யெயிறு அணிந்து நின்ற - பிறைபோல வளைந்த கோரப்பற்களை அணுகி நிற்கின்ற, இருங்களியாணர் வாழ்விற்கு - மிக்க மகிழ்ச்சிக்குக் காரணமான புது வருவாயையுடைய மனிதருடைய வாழ்க்கை அழிந்து ஒழிதற்கு, இமைப்பிடைப் பெரிது கண்டாய் - கண்ணிமைப் போதாகிய ஒரு மாத்திரையும் மிகையாகும் காண், (எ - று.) கவளம் - யானை உணவு. அணிந்து - அண்மி. மான் குட்டியின் வாழ்வுகூட நீளிதாம்; மனிதர் வாழ்வு அழிதற்கு ஒரு கண்ணிமைப் பொழுதும் மிகை என்றார் என்க. இருங்களியாணர் வாழ்க்கை என்றது இகழ்ச்சிக் குறிப்பு. | (729) | | |
|
|