சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்

186. ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
1ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்.

     (இ - ள்.) ஆயிடை - அப்போது; சாரணர்கள் - இரண்டு சமண முனிவர்கள்; ஆர்
அணங்கு அவிர் ஒளி எரிய - பொருந்திய தெய்வத் தன்மை விளங்குகின்ற ஒளி
மிகுதிப்படுமாறு; விசம்பினின்று இழிந்து - விண் ணினின்று இறங்கிவந்து; தாதைதன் -
எல்லோருக்குந் தந்தையாக விளங்கும் அருகக் கடவுளின்; ஏர் அணி வளநகர்
வலம்கொண்டு - அழகு பொருந்திய சிறப்புள்ள திருக்கோயிலை வலஞ்செய்து; இன்னணம்
- இவ்வாறு; சீர்அணி மணிக்குரல் - நன்கு ஒலிக்கும் மணியொலி போன்ற குரலானது;
சிலம்ப வாழ்த்தினார் - முழங்கும்படியாகப் போற்றலானார்கள், (எ - று.)

     அரசன் கோயிலைவிட்டு வெளிப்படுஞ் சமயத்தில் சாரணர் இருவர் விண்ணில்
நின்றும் இழிந்து திருக்கோயிலை வணங்கி வாழ்த்தினர். சாரணர் விண்ணிற் போக்கு வரவு
செய்யுஞ் சமண முனிவர்கள். அவர்கள், தலசாரணர், ஐலசாரணர், பலசாரணர்,
புஷ்பசாரணர், தந்து சாரணர், சதுரங்குலசாரணர், சங்கசாரணர், ஆகாச சாரணர் என எண் வகைப்படுவர். இவர்கள் இரண்டிரண்டு பேர்களாகச் சென்று அறவுரை கூறுதல் வழக்கம்.
இங்கு வந்த சாரணர்கள் இருவரின் பெயர், ஐகந்நந்தனன், அபிநந்தனன் என்பனவாகும்.

( 68 )