1860. இன்னுயி ரழியும் போழ்து
     மிறைவனுக் குறுதி யல்லான்
முன்னிய முகமன் மாட்டா
     முற்றிய வறிவி னாரை
மன்னவன் மகிழ்ந்து நோக்கி
     வாழுயிர் வவ்வுங் காலன்
தன்னைநா மிகந்து சேருஞ்
     சரண்பிறி துரைமி னென்றான்.
     (இ - ள்.) இன் உயிர் அழியும் போழ்தும் - தம் இனிய உயிர்க்கு அழிவு நேர்வதாய
காலத்தேயும், இறைவனுக்கு - தம் அரசனுக்கு, உறுதி அல்லால் - உறுதி பயப்பனவற்றையே
கூறுவதல்லால், முன்னிய முகமன் மாட்டா- அவனது சினத்தை அஞ்சிப் பொருந்துமாற்றால்
முகமன் கூறுதலில்லாத, முற்றிய அறிவினாரை - கல்விகேள்விகளான் நிறைந்து முதிர்ந்த
அறிவுடைய அமைச்சர்களை, மன்னவன் மகிழ்ந்து நோக்கி - பயாபதி மன்னன் விரும்பிப்
பார்த்து, வாழ் உயிர் வவ்வும் காலன்தன்னை - இனிதே வாழா நின்ற உயிர்களைக்
கவர்கின்ற மறலியை, நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரைமின் என்றான் - யாம் கடந்து
எய்துதற்குரிய புகலாவது பிறிதொன்றனைக் கூறுங்கோள் என்றான், (எ - று.)

“தம்முயிர்க் குறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
     வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்Ó

     என்று நல்லமைச்சரைக் கம்பர் கூறிய இச் செய்யுளை ஈண்டு ஒப்புக் காண்க.
இவ்வாறு கூறிய அமைச்சரை மகிழ்ந்து நோக்கிக் காலனைக் கடத்தற்குரிய சரண் பிறிது
உரைமின் என்றான் என்க.

(730)