அத்துறவியரடியின்றிப் புகல் பிறிதில்லை எனல்

1862. குருகயா வுயிர்க்குஞ் சோலைக்
     குளிரணிப் பழன நாட
முருகயா வுயிர்க்கும் பூவார்
     முறிமிடை படலை மாலைத்
திருவயா வுயிர்க்கு மார்பற்
     செறிதவர் சரண மூலத்
தருகயா வுயிர்ப்பி னல்லா
     லரண்பிறி தாவ துண்டோ.
     (இ - ள்.) குருகு அயா உயிர்க்கும் குளிர்சோலை அணி பழன நாட - அன்னங்கள்
இளைப்பாறுகின்ற குளிர்ந்த சோலைகளாலே அழகுடைத்தாய வயல்களையுடைய நாட்டின்
அரசனே, முருகு அயா வுயிர்க்கும் பூ ஆர் முறிமிடை படலை மாலை - தேன் துளிக்கும்
மலருடனே பொருந்திய தளிர்களும் செறித்துள்ள பல் பூங்கண்ணிப் படலை என்னும்
மாலையணிந்த, திரு அயா உயிர்க்கும் மார்பன் - திருமகள் வருத்தந்தீர்ந்து வதிகின்ற
மார்பையுடைய அருகபரமனை, செறிதவர் சரண மூலத்து - நெருங்குதற்குக் காரணமான
தவத்தையுடைய துறவியரின் திருவடியின் கண்ணே - பொருந்தி, அருகு - அவற்றின்
பக்கத்தே, அயா வுயிர்ப்பினல்லால் - இறப்பச்சம் தீர்ந்து அமைதி யடைவதன்றி, அரண்
பிறிது ஆவதுண்டோ - புகலாவதொன்று பிறிதில்லை, (எ - று.)

     படலைமாலைத் திரு அயாவுயிர்க்கும் மார்பன் என்றது அருகபரமனை. துறவியர்
திருவடிகளிற் றஞ்சம் புகுந்து இறப்பச்சம் அகற்றி அமைதி யுறுதலன்றிப் புகல் வேறில்லை
என்றார் என்க.     

(732)