பயாபதி பரிவு தீர்தல்

1863. எரிகின்ற சுடரி னெய்பெய்
     திடுதிரி தூண்டி யாங்கு
விரிகின்ற புலமை வீரர்
     மொழிதலும் காதி தன்னாற்
பரிகின்ற வுரிமை வல்ல
     படரொழி மனத்த னானான்
சொரிகின்ற மதுவின் மாரித்
     துவலையி னனைந்த தாரான்.
     (இ - ள்.) எரிகின்ற சுடரின் - நன்கு எரியா நின்ற விளக்கில், நெய்பெய்து - நிறைய
நெய் வாக்கி, இடுதிரி தூண்டி ஆங்கு - புதுவதாய் இட்ட திரியையும் நன்கு தூண்டி
விட்டாற் போன்று, விரிகின்ற புலமை வீரர் - கல்வி கேள்விகளால் விரிந்து திகழா நின்ற
மெய்யறிவுடைய பேராண்மையாளராகிய அவ் வமைச்சர்கள், மொழிதலும் - இவ்வாறு
கூறியவுடன், காதி தன்னால் - ஞானாவரணீயம் முதலிய நால்வகைக் காதிகன் மங்கள்
காரணமாக, உரிமை வல்ல - உயிரைப் பற்றி நலியும் உரிமையாகிய  வன்மையினையுடைய, பரிகின்ற படர் - வருந்துதற்கேதுவாகிய துயரங்களை, ஒழிமனத்தன் ஆனான் - ஒழிந்து விளக்கமுடைய மனத்தை உடையனா யினான், ( அவன் யாரெனில்) சொரிகின்ற மதுவின் மாரித்துவலையின் நனைந்த தாரான் - பொழியா நின்ற தேன் மழையின் துளியாலே நனைதலையுடைய வெற்றி மாலை அணிந்த பயாபதி வேந்தன்,(எ - று.)

     உயிரின் துயர்க்கெல்லாம் காரணமாதல் பற்றிக் காதிதன்னால் உரிமைவல்ல படர்
என்றார்.

     எரிகின்ற விளக்கின்கண் நெய் பெய்து திரியையும் தூண்டிவிட்டாற் போன்று பயாபதி மன்னன் அமைச்சர் அறிவுரைகளாலே விளக்கமுற்று துயர் தீர்ந்தான் என்க.

(733)