1866. | அருள்புரி யழலஞ் சோதி யாழியா னாதி யில்லான் மருள்புரி வினைகட் கென்று மறுதலை யாய வாமன் இருள்புரி யுலகஞ் சேரா வியனெறி பயந்த பெம்மான் பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய வுலகங் காண்பார். | (இ - ள்.) அருள்புரி - உயிர்களிடத்தே அருள் பொழிகின்ற, அழல் அம் சோதி ஆழியான் - தீப் பிழம்புபோன்ற அழகிய ஒளியையுடைய அறவாழி அந்தணன், ஆதியில்லான் - தனக்கொரு முதலில்லாதவன், மருள்புரி வினைகட்கு என்றும் மறுதலையாய வாமன் - மயக்கத்தைச் செய்கின்ற ஞானாவரணீயம் முதலிய வினைகட்கு எப்போதும் முரண் ஆயவனாகிய வாமன் என்னும் திருப்பெயரையுடையோன், இருள்புரி உலகம் சேரா இயல்நெறி பயந்த பெம்மான் - இருள்சேர் இன்னாத் தருகின்ற வுலகத்தே பிறவாதபடி செல்லுதற்குரிய நன்னெறியைக் கூட்டும் மேலான மெய்ந்நூலினை உரைத்தருளிய பெருமான் என்று கூறப்படுகின்ற அருகக்கடவுளின், பொருள் புரி விழவு - மெய்ப்பொருள் உணர்ச்சிதரும் விழாவினை, காண்பார் - விழைவுடனே காண்பவர்கள், புண்ணிய உலகம் காண்பார் - புண்ணிய உலகங்களிலே சென்று பிறப்பார்கள், (எ - று.) ஆழியான் ஆதியில்லான் வினைகட்கு மறுதலையாய வாமன் இயல்நெறி பயந்த பெம்மான் பொருள்புரி விழவினை விரும்பிக் காண்போர் கற்ப உலகங்களிலே பிறந்து இன்புறுவர் என்க. | (736) | | |
|
|