இதுவுமது | 1869. | இன்னிசை முரசங் கேட்டே மெய்பெரி தினிய கேட்டா மன்னிய நங்கள் வாணாள் வாழ்கநம் மிறைவ னென்னாப் பொன்னியன் மலருஞ் சாந்துஞ் சுண்ணமும் புகையும் பொங்கத் துன்னிய நகர மாந்தர் 3துறக்கம்பெற் றவர்க ளொத்தார். | (இ - ள்.) இன் இசை முரசம் கேட்டே - இனிய இசையினை உடைய விழாமுரசின் முழக்கத்தைக் கேட்ட துணையானே, பெரிது இனிய மெய் கேட்டாம் - யாம் மிக்க இனிமை பயப்பதொரு மெய்ப் பொருளைக் கேட்டோம், நம்மிறைவன் - நம் மன்னனாகிய பயாபதி வேந்தன், நங்கள் வாழ்நாள் மன்னிய வாழ்க - தன் வாழ்நாள்களோடு எம்முடையவாக நிலை பெற்ற வாழ்நாள்களையும் ஒருங்கே தன்னுடையனவாகப் பெற்று வாழ்வானாக, என்னா - என்று, பொன்இயல் மலரும் - பொன்னிறமமைந்த மலர்களும், சாந்தும் - நறுமணக் குழம்புகளும், சுண்ணமும் - நறுமணப் பொடிகளும், புகையும் - நறுமணப் புகைகளும், பொங்க - மிக்குக் கமழா நிற்ப, துன்னிய நகரமாந்தர் - குழீஇய போதன நகரத்து மக்கள், துறக்கம் பெற்றவர்கள் ஒத்தார் - சுவர்க்க நாட்டை இவ்வுடலோடு எய்தியவர்களை ஒத்து மகிழ்ந்தனர், (எ - று.) “யான் வாழும் நாளும் பண்ணன் வாழியÓ என்னும் வாக்கை ஈண்டு ஒப்பு நோக்குக. நகர மாந்தர் விழா முரசங்கேட்டு மெய் பெரிது இனிய கேட்டாம் என்று வாழ்க என்னாப் பொங்கத் துறக்கம் பெற்றவர்கள் ஒத்தார் என்க. | (739) | | |
|
|