வேறு
வரிப்பாட்டு


அச்சாரணர் இறைவனை ஏத்துதல்

187. விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
1உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
யுண்மகிழ்வா யல்லை யெனினு 2முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே.
 

     (இ - ள்.) விண்வணங்க - விண்ணுலகத்தவர்கள் போற்றுமாறு; விரைமணந்த
தாமரைமேல் சென்றாய் - மணம்பொருந்திய தாமரை மலர்மேற் சென்றருளினாய்;
உரைமணந்து யாம் பரவ - சான்றோர் உரைத்த உரையும் பாட்டும் கலந்து யாம் போற்ற;
உள்மகிழ்வாயல்லை - அதன் பொருட்டு நீ மனமகிழ்வோய் அல்லை; உள்மகிழ்வாய்
அல்லை எனினும் - அவ்வாறு நீ மனமகிழ்வோய் அல்லை யாயினும்; உலகு எல்லாம்
கண்மகிழ நின்றாய்கண் காதல் ஒழியோம் - உலகத்துயிர்களெல்லாம் நின் கண்ணதாகிய
அருளைப்பெற்று மகிழுமாறு நின்ற நின்னிடத்தில் யாம் அன்பு ஒழிவேம் அல்லேம்,
(எ - று.)

     அருகக்கடவுளை வாழ்த்தத் தொடங்கிய சாரணர்கள், “நாங்கள் நின்னிடத்து
அன்புநீங்கோம்“ என்கின்றனர். அருகக்கடவுள் தாமரை மலரை ஊர்தியாகக்கொண்டு
அதனை நடத்திச் சென்றார் என்பது வரலாறு. அவ்வர லாற்றைக் கருதி, “விரைமணந்த
தாமரை மேல் விண்வணங்கச் சென்றாய்“ என்றார். அருகக்கடவுளுக்குப், “பூ மேல்
நடந்தான்“ என்று ஒரு பெயர் வழங்குவதும், திருவள்ளுவர் “மலர்மிசை யேகினான்“ என்று
கூறுவதும் ஈண்டு எண்ணத்தக்கன. கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவரென்பதும்,
எல்லோருக்கும் ஒரே தன்மையாக அருள்புரிபவர் என்பதும் 2, 3, 4 அடிகளிற்
கூறப்பட்டன.

( 69 )