நகரம் அணி செய்தல் | வேறு | 1870. | பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி வாரணி முரசொடு வளைக ளார்த்தரோ காரணி கடலொலி 1கைத விர்த்ததே. | (இ - ள்.) பூரண மணிக்குடம் நிரைத்த - மணிகள் பதிக்கப்பட்ட நிறை குடங்கள் நிரலாக வைக்கப்பட்டன, பொன் அணி தோரணம் எடுத்தன - பொன்னிறமான அழகிய தோரணங்கள் உயர்த்தப்பட்டன, வெண்கொடி துதைந்த - வெண்பட்டாலாய கொடிகள் செறிக்கப்பட்டன, வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து - வாராற் கட்டப்பட்ட அழகிய முரசங்களோடே சங்கங்கள் முழங்கி, கார் அணி கடல் ஒலி - கரியதாய் அழகுடைய கடலினது முழக்கத்தைக், கைதவிர்த்ததே - மிகவும் மறைத்தன, (எ - று.) பூரண குடங்கள் நிரைக்கப்பட்டன; தோரணமெடுக்கப்பட்டன; முரசொடு வளைகள் முழங்கிக் கடலொலி தவிர்த்தன என்க. | (740) | | |
|
|