வணிகர் பொன் அணி அணிந்து வருதல்

1877. பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் 1சுண்ணமொய்
மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார்
மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ
டின்மல ரிருநிதிக் கிழவ ரீண்டினார்.
     (இ - ள்.) பொன்மலர்க் கண்ணியர் - பொன்னாலியன்ற மலர்மாலையை முடியின்
உடையராய், மொய்மின் மேனிமேல் - செறிந்த ஒளிதிகழும் தம்முடலின்மேல், பொன்செய்
சுண்ணம் - பொன்னாற் செய்யப்பட்ட பொடியை, விளங்க அப்பினார் - திகழும்படி
திமிர்ந்தவராய், மென்மலர் அணிநகை மிளிரும் கோலமோடு - மெல்லிய மலராலாய
மாலைகளும் அணிகலன்களும் திகழ்கின்ற எழிலோடே, இன்மலர் இரு நிதிக் கிழவர்
ஈண்டினார் - இனிதே பெருகும் பெரிய செல்வராய வணிகர்கள் குழீ இயினார், (எ - று.)

     மலரிருநிதி : வினைத்தொகை.

     வணிகர் பொன்னிற மலர்மாலை யணிந்து பொற்சுண்ணம் அப்பி பொன்னிறமே
திகழ ஈண்டினர் என்க.

(777)