இதுவுமது

1878. பேரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
2போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
வாரணி வனமுலை யவரொ டென்பவே.
     (இ - ள்.) பேர் ஒளிப் பீதக வுடையர் - மிக்க ஒளியை உடைய பொன்னாடையை
உடுத்தியவராய், பைம்பொனால் ஆர் ஒளி தழுவிய பூப்பலி - பசிய பொன் ஒளியாலே
தழுவப்பட்ட மலராற் செய்தற்குரிய பூப்பலியை, போர் ஒளி யானைமேல் - போரிடத்தே
புகழுடைய யானையின் பிடரின்மேல், நிரைத்துப் போந்தனர் - நிரலாக வைத்துக்கொண்டு
வருவாராயினர், வாரணி வனமுலை அவரொடு என்பவே - கச்சணிந்த அழகிய
முலைகளையுடைய தம் மகளிர்களுடனே, என்று கூறுவர் சான்றோர், (எ - று.)

மேலும் அவ்வணிகர்கள், பொன்னாடையுடுத்துப், பொன்மலர்ப் பலி ஏந்தி,
யானைமேல் நிரைத்துத், தம் மகளிருடனே போந்தனர் என்க

(778)