இதுவுமது
189. மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே.
 

     (இ - ள்.) வான்வணங்க - விண்ணவர்கள் போற்ற; மணம்மயங்கு தாமரைமேல்
சென்றாய் - மணம் நிறைந்த தாமரை மலரின்மேல் நடந்து சென்றருளினாய்; குணம்மயங்கி
யாம்பரவ - உன்னுடைய குணங்களால் நாங்கள் அன்பிலமிழ்ந்து போற்றுதலைச் செய்ய;
கொண்டு உவப்பாய் அல்லை - அதனை ஏற்றுக்கொண்டு நீ மகிழ்வோயல்லை; கொண்டு
உவப்பாய் அல்லை எனினும் - அவ்வாறு ஏற்றுக்கொண்டு நீ மகிழ்வோயல்லை என்றாலும்; உலகம் கண்டு குளிர்ந்து உவப்ப நின்றாய்கண் - உலகத்துயிர்கள் கண்டு
பிறவித்துன்பம் ஒழிந்து மகிழுமாறு நின்ற நின்னிடத்தில்; காதல் ஒழியோம் - நாங்கள்
அன்பு நீங்கமாட்டோம், (எ - று.)

     வான் என்பது வானத்திலுள்ள தேவர்களைக் காட்டுதலின் இடவாகு பெயர்.
சைனசமயத்திலே கூறப்பெறும் இறைவனுடைய குணங்கள், அநந்தசுகம், அநந்த ஞானம்,
அநந்தவீரியம், அநந்ததரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை,
அழியாவியல்பு என எட்டாம்.

( 71 )