1895.

பருகலாம் பானிலாப் பரந்த மாமணி
அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற்
4பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம்
முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே.
    (இ - ள்.) அம் முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மை - அந்த மணங்கமழும் அசோக நீழலுடைய அருக பரமேட்டியின் மூன்று பகுதித்தாய குடை; பருகல் ஆம்
பால் நிலாப்பரந்த - உண்ணற்குரியதாகிய பால்போன்ற வெண்மையான நிலவொளி
பரந்தனவாகிய, மாமணி அருகெலாம் அணிந்து - சிறந்த மணிமாலைகள் விளிம்பில்
அணியப்பட்டு, அகடு அம் பொன் ஆர்ந்து - நடுவிடத்தே அழகிய பொன்றகடு பொருந்தப்
பெற்று, மேல் பெருகல் ஆம் சுடர் ஒளி பிறங்கி - மேற்பகுதியிலே, பெருகா நின்ற
சுடர்க்கற்றைகள் திகழ, நின்றது - நின்றது, (எ - று.)

     பிண்டியான் குடை பால்நிலாப் பரந்த ஒளிபிறங்கி நின்றன என்க.

(785)