(இ - ள்.) நீ ஒளியகி உலகுஆகி விரிந்தாய் என்கோ - நீயே ஒளியாகவும் உலகங்களாகவும் பரவியுள்ளாய் என்பேனோ, அன்றி, நின்னொளியின் உள் உலகெலாம் அடங்கிற்று என்கோ - நின்னியல்பான ஒளியினுள்ளே அநாதியாய உலகமுற்றும் அடங்கியுள்ளது என்பேனா, அளி ஆர - உன் அருள் பொருந்தும்படி, நீ உலகம் ஆள்கின்றாய் என்கோ - நீயே இவ்வுலகங்களை ஓம்புகின்றனை என்பேனோ அன்றி, அமர் உலகுதான் நின்னது அடியடைந்தது என்கோ - நின்னைப் பெரிதும் விரும்புகின்ற இவ்வுலகமே உன்னுடைய திருவடிப் பெருமையை உணர்ந்து அவ்வடிகளில் புகல்புக்கது என்பேனோ, விளியாத மெய்ப்பொருளை - அழிவில்லாத மெய்ப்பொருளின்றன்மையை, நீ விரித்தாய் என்கோ - நீ அறிந்து கூறினாய் என்பேனோ அன்றி, நீ விரித்தவாறே - நீ கூறியவண்ணமாய், மெய்ப்பொருள் விரிந்தது என்கோ -அம்மெய்ப்பொருள் உளவாயிற்று என்பேனோ, தெளியாமலில்லை - எளியேமாயினும் எம்மால் உன் திருவடிப் பெருமை சிறிது அறியப்படாமலில்லை, தெளிந்தாலும் செவ்வே மெய்ம்மை தெரிந்து உரைக்கலாமே - சிறிது அறிந்த துணையானே உன் திருவடிப் பெருமையை நன்கு தெரிந்து கூற எம்மனோரால் இயல்வதேயோ, (எ - று.)