1910. விண்டாங்கு 6வெவ்வினை வெரூஉவுதிர நூறி
     விரிகின்ற 7மெய்ஞ்ஞானச் சுடர்விளக்கு மாட்டிக்
கண்டார்க ணின்னிலைமை 8கண்டொழுக யானின்
     கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப் பட்டுத்
தண்டாஅ மரைமலரின் மேனடந்தா யென்றுந்
     9தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தா யென்றும்
வண்டார சோகினிழல் வாயமர்ந்தா யென்றும்
     வாழ்த்தினால் வாராயோ வானவர்தங் கோவே.
     (இ - ள்.) வெவ்வினை - பிறவிக்குக் காரணமான வெவ்விய வினைகள், வெரூஉ -
தம்பால் நிற்றலை அஞ்சி, விண்டு - வேறுபட்டு, உதிர - உதிர்ந்துபோகும்படி, நூறி - தம்
தவவொழுக்கத்தாலே நீறுபடுத்தி, விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர்விளக்கும் மாட்டி -
விரிதலையுடைய மெய்யறிவென்னும் ஒளிமிக்க விளக்கையும் தன்னுள்ளே கொளீஇ,
கண்டார்கள் - உன்னைக் காணாநின்ற சான்றோர்கள், நின் நிலைமை கண்டு ஒழுக - உனது
தன்மையை உள்ளவாறு கண்டு அதற்கேற்றவாற்றான் ஒழுகுவாராக, யான் - எளியனாகிய
யானோ, நின்கதிர் மயங்கு சோதியால் - உன்னுடைய கதிரவன் மயங்குதற்குக் காரணமான
ஒளியுடைமையானே, கண் விளக்கப்பட்டு - கண்கள் விளக்கமடையப்பெற்று,

     தண் தாஅமரை மலர்மேல் - குளிர்ந்த தாமரை மலரிடத்தே, நடந்தாய் என்றும் -
நடந்தருளியவனே என்று கூறியும், தமனீயம் பொன் அணையின்மேல் அமர்ந்தாய் என்றும்
- தமனியம் என்னும் பொன்னாலியன்ற திரு அணையின் மேல் எழுந்தருளியவனே என்று
கூறியும், வண்டு ஆர் அசோகின் நிழல்வாய் அமர்ந்தாய் என்றும் - வண்டுகள் மொய்க்கும்
அசோக மரத்தினது நிழலின் கண்ணே வீற்றிருந்தருள்பவனே என்று கூறியும், வாழ்த்தினால்,
யானறியளவையின் ஏத்தித்தொழுதால், வானவர் தம் கோவே - தேவ தேவனே, வாராயோ
- வந்தருள மாட்டாயோ, வந்தருள்வாயோ யான் அறிகிலேன், (எ - று)

(800)