1911. | 1கருவார்ந்த பொருணிகழ்வுங் காலங்கண் மூன்றுங் கடையிலா 2நன்ஞானக் கதிரகத்த வாகி 3ஒருவாதிங் கவ்வொளியின் னுள்ள வாகில் 4உலகெல்லா நின்னுளத்தே யொளிக்க வேண்டா 5திருவார்ந்த தண்மார்ப தேவாதி தேவ திரளரைய 6செந்தளிர சோகமர்ந்த செல்வ வருவாரும் வையகமு நீயும்வே றாகி மணிமேனி மாலே மயக்குவதிங் கென்னோ. | (இ - ள்.) கருஆர்ந்த பொருள் நிகழ்வும் - உலகந்தோன்றுதற்குக் கருவாகப் பொருந்திய புற்கல முதலிய பொருள்களின் நிகழ்ச்சியும், காலங்கள் மூன்றும் - இந்நிகழ்ச்சிக்குக் காரணமான இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூவகைக் காலங்களும், கடையிலா நன்ஞானக் கதிர் அகத்தவாகி -உன்னுடைய இறுதியில்லாத மெய்யறிவின் ஒளியின் ஊடே உள்ளனவாய், ஒருவாது -மேலும் அவ்வறிவினின்றும் அகலாமல், அவ்வொளியின் உள்ள ஆகில் - அவ்வறிவொளியின்கண் யாண்டும் உள்ளனவானால், உலகெலாம் நின்னுளத்தே - எல்லாவுலகமும் உன்னகத்தனவே, ஒளிக்க வேண்டா - இவ்வுண்மையை எளியேங்கட்கு மறைத்தருள வேண்டா, திருவார்ந்த தண் மார்ப! - திருமகள் பொருந்திய குளிர்ந்த மார்பையுடையோனே!, தேவாதி தேவ - தேவர்கட்குந் தேவனே!, திரள் அரைய செந்தளிர் அசோகு அமர்ந்த செல்வ - திரண்ட அடிப்பாகத்தையுடையதும் செவ்விய தளிர் உடையதுமாகிய அசோகமரத்தின் நிழலிலே இருந்த செல்வனாகிய அருகனே!, வருவாரும் - பிறவிகளிலே சுழன்று வருகின்ற உயிர்களும், வையகமும் - அவை பிறத்தற்கிடமான உலகங்களும், நீயும் - இறையாகிய நீயும், வேறாகி - வெவ்வேறாகத் தோன்றி, மணிமேனி மாலே - நீல மணிபோன்ற நிறமுடைய திருமாலே, மயக்குவது இங்கு என்னோ - இவ்விடத்தே எளியேங்களை மயங்கச் செய்வது எதனைக் குறித்தோ, அறிகின்றிலோம், (எ - று.) | | | |
|
|