1912. செங்கணெடு மாலே 1செறிந்திலங்கு சோதித்
     2திருமுயங்கு மூர்த்தியாய் 3செய்யதா மரையின்
அங்கணடி 4வைத்தருளு மாதியா யாழி
     அறவரசே 5யென்றுநின் னடிபணிவ தல்லால்
எங்கணிட 6ரகலுமா றிந்திலைமை யெய்தி
     இருளுலக நீக்குமரு டருகநீ யென்று
வெங்கணிரு வினையை7 யற வென்றாய்முன் னின்று
     விண்ணப்பஞ் செய்யும் விழுத்தகைமை யுண்டோ.
     (இ - ள்.) செங்கண் நெடுமாலே - சிவந்த கண்களையுடைய நெடிய மாலே, செறிந்து
இலங்கு சோதி - நெருங்கி விளங்குகின்ற ஒளியையுடைய, திருமுயங்கு - திருமகள்
தழுவுகின்ற, மூர்த்தியாய் - உருவையுடையவனே, செய்ய தாமரையின் - சிவந்த தாமரை
மலரின்கண்ணே, அங்கண் அடி வைத்தருளும் - அழகிய எம்கண் போன்ற திருவடிகளை
வைத்தருள்கின்ற, ஆதியாய் - ஆதியாகிய இறைவனே, அறஆழி அரசே - அறவாழியை
யுடைய வேந்தனே, என்று - என்றின்னோரன்ன நின்திருப் பெயர்களை இயம்பி, நின்
அடிபணிவதல்லால் - உன்னுடைய திருவடிகளை வணங்குவதே அல்லாமல், எங்கண் -
எம்மிடத்தே உள்ள, இடர் அகலுமாறு - பிறவித்துன்பம் அகன்று போம்படி, இந்நிலைமை
எய்தி - இந்தநிலையிலே எம்பால் எழுந்தருளிவந்து, நீ - தேவதேவனாகிய நீ, இருள்
உலகம் நீக்கும் அருள் தருக என்று - மயக்கமுடைய இவ்வுலகத்தே எய்தும் பிறப்பை
ஒழிக்கவல்ல உனது திருவருளைத் தந்தருள்க என்று வேண்டி,

     வெங்கண் இருவினையை - தறுகண்மையை உடைய இருவகை வினைகளையும், அற
வென்றாய் முன்நின்று - முற்றும் வென்றொழித்த உனது முன்னே நின்று, விண்ணப்பம்
செய்யும் - வேண்டுகோள் செய்தற்குரிய, விழுத்தகைமை - பெருஞ்சிறப்பு, உண்டே -
எம்மிடத்தே உளதேயோ, (இல்லை என்றபடி)

(802)