பயாபதி மன்னன் ஒரு பொன்மண்டபம் எய்துதல | வேறு | 1913. | என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச் சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து வென்றவன் கோயில் வலங்கொண்டு 1மீண்டுமொர் பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான். | (இ - ள்.) என்று - என்றிவ்வாறு, இறைவனை - அருகக் கடவுளை, இறைஞ்சி - வணங்கி, நன்கு ஏத்தி - நன்றாகப் புகழ்ந்து, சென்று - அண்மையிலே சென்று, உயர் சேவடிச்சேடம் தலைவைத்து - உயரிய திருவடிச் சேடமாகிய நிர்மாலியத்தைத் தன் தலையிலே சூட்டிக்கொண்டு, வென்றவன் கோயில் வலங்கொண்டு - வினைகளை வென்றவனாகிய அவ்வருவகக் கடவுளின் திருக்கோயிலை வலம் வந்து, மீண்டும் - மீளவும், ஓர் பொன்றவழ் வேதிகை - ஓர் அழகு தவழ்கின்ற மேடையையுடைய, மண்டபம் புக்கான் - மண்டபத்தின் கண்ணே புகுந்தான், (எ - று.) பயாபதி மன்னன், இறைவனை இறைஞ்சிச் சேடந் தலைவைத்துக் கோயில் வலங்கொண்டு, மீண்டும் ஒரு பொன் மண்டபம் புக்கான் என்க. | (803) | | |
|
|