அறங்கூறி எம்மை உய்யக்கொண்மின் என
அமைச்சர் வேண்டல்

1916. வணங்கி மணிமுடி மன்ன னிருப்ப
மணங்கமழ் கண்ணியர் மந்திர மாந்தர்
அணங்கு மறவமிர் தூட்டி யடிகள்
பிணங்கும் பிறவிகள் 1பேர்த்துய்யமி னென்றார்.
 
     (இ - ள்.) மணிமுடி மன்னன் வணங்கி இருப்ப - இவ்வாறு மணிகள் அழுத்திய
முடியையுடைய பயாபதி மன்னன் அத்துறவியை வணங்கி இருந்தானாக, மணங்கமழ்
கண்ணியர் - நறுமணங்கமழும் முடிமாலையையுடைய, மந்திரமாந்தர் - ஆராய்ச்சிவல்ல
அமைச்சர், அடிகள் - அடிகளே, அற அமிர்து ஊட்டி- அறவுரைகளாகிய அமிழ்தத்தை
உண்ணத் தந்து, பிணங்கும் அணங்கும் பிறவிகள் - மாறுபடுமியல்பினவாய் வருத்துகின்ற
பிறவிகளாய பிணிகளை, பேர்த்து - மாற்றி, உய்மின் - எம்மை உய்யக்கொண்டருள்க,
என்றார் - என்று வேண்டினார், (எ - று.)

     உய்மின் - உய்யக் கொண்மின்.

     அமைச்சர்கள் அரசனின் குறிப்பறிந்து அடிகளே பிணங்கும் பிறவிகள் பேர்த்துய்மின்
என்றாரென்க. அணங்கும் அறவமிர்து என்றே கொண்டு - அழகிய அற வமிர்தெனக்
கொள்ளின், உம்: இசை நிறை எனக்கொள்க.

(806)