நும் மன்னனை அறங் கேளாது என்னை
வினவியதென் னெனல்

1917.

2வன்ன மணிமுடி மன்ன 3னிருந்திட
இன்னியற் செல்வ 4மெனைப்பல வெய்திய
மன்ன னறியுந் திருவற மாண்பினை
என்னை வினவிய தென்னைகொ லென்றான்.
     (இ - ள்.) வன்ன மணிமுடி மன்னன் இருந்திட - நிறமமைந்த மணிகளானியன்ற
முடியையுடைய பயாபதி வேந்தன் நும்பால் உளனாக, இன்னியல் செல்வம் எனைப்பல
எய்திய - இனிய இயல்பினையுடைய செல்வங்கள் எத்துணையும் பலவாயவற்றைப்
பெற்றுள்ள, மன்னன் அறியும் திரு அறம் - அம் மன்னனாலே அறியப்பட்டுள்ள சிறந்த
அறவுரையின், மாண்பினை - பெருமைகளை, என்னை வினவியது என்னைகொல் என்றான்
- என்னைக் கூறும்படி வேண்டிக் கோடற்குக் காரணம் யாது, என்று முனிவன் வினவினான்,
கொல்: அசை, (எ - று.)

     மணிமுடி மன்னன் திருவறம் உயர்ந்தோன் நும்பாலிருக்க அவன் பால் வினவி
அறிந்து கொள்ளாமல் என்னை வினவியதன் காரணம் என்னை என்றான் என்க.

(807)