1919. | மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை அந்தரம் வாழு மமரர் வழிபடும் தந்திர1 ஞ் சான்ற தவத்திற் கரசனும் இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான். | (இ - ள்.) மந்திர மாந்தர் மொழிதலும் - அமைச்சர்கள் இவ்வாறு கூறிய உடனே, வான் இடை அந்தரம் வாழும் அமரர் வழிபடும் - விசும்பினிடையே உள்ள அந்தர உலகில் வாழ்கின்ற தேவர்களும் வணங்கும், தந்திரம் சான்ற தவத்திற்கு அரசனும் - நூலறிவானிரம்பிய தவத்திற்கு அரசனாகிய அம்முனிவனும், இந்திரன் அன்னாற்கு எடுத்து உரைக்கின்றான் - தேவேந்திரனை ஒத்த சிறப்புடைய பயாபதி மன்னனுக்கு அறவுரைகளை எடுத்துக் கூறுவானாயினான், (எ- று.) தந்திரம் - நூல். இந்திரன் அன்னான்: பயாபதி. அத்துறவி பயாபதிக்கு, திருவறம் எடுத்துக் கூறுகின்றான் என்க. | (809) | | |
|
|