(இ - ள்.) அவர் சென்று அமர்ந்த உழி - அந்தச் சமண முனிவர்கள் சென்று அமர்ந்த இடமானது; தென்றலும் - தென்றற் காற்றும்; செழுமதுத் திவலைமாரியும் - செழுமையான தேன்துளிகளின் மழையும், என்றும் நின்று அறாதது - எப்பொழுதும்நிலைபெற்று நீங்காததான; ஓர் இளந்தண் பிண்டியும் - இளமைமிக்க குளிர்ந்த ஓர் அசோகமரமும்; நின்று ஒளி திகழ்வது - ஒளிநிலைபெற்று நின்று விளங்குவதாகிய; ஓர் நிலாக்கல் வட்டமும் - ஒப்பற்ற நிலாவொளி வீசும் படிகக் கல்வட்டமும்; திகழ்ந்து தோன்றும் - விளங்கித் தோன்றுவதாகும், (எ - று.) சமணமுனிவர்கள் கடவுள் வழிபாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட போது அரசனைக் கண்டு அவனுக்குத் தருமோபதேசஞ் செய்ய எண்ணினர். கோயிலின் முன்னால் அசோகமரத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த படிகக் கல்வட்டத்தின்மீது சென்று அமர்ந்தனர் என்க. 'தென்றலும் மதுத்திவலை மாரியும் நின்று அறாதது' என்பது அசோகமரத்திற்கு அடைமொழி. மதுத்திவலைமாரி - மழை போன்ற தேன்துளிப் பெருக்கு. தருமோபதேசம் செய்தற்கு வரும் சமணமுனிவர்கள் அமர்தற்பொருட்டு, ஆற்றிடைக்குறை, கோயில்வாயில், புண்ணிய தீர்த்தக்கரை பூம்பொழில் முதலிய நல்லிடங்களில் அசோகமரத்தை வளர்த்து அதன்கீழே பளிங்குக்கல் அமைத்துவைத்தல் சைனர் இயல்பு. |