1920. | கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின் விதிசெய் வினையும் வினைவெல் வகையு மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான். | (இ - ள்.) கதியும் - உயிர்கள் செல்லும் பிறப்பும், அக்கதியினுள் - அப்பிறப்பினுள், துப்பும் - நிகழும் நுகர்ச்சியும், அத்துப்பின் விதி செய்வினையும் - அந்நுகர்ச்சியை ஒழுங்குபடுத்துகின்ற வினைகளின் தன்மையும், அவ்வினை வெல்வகையும் - அவ்வினைகளை வென்றொழிக்கும் உபாயமும், மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் - மெய்யறிஞரால் விரும்பப்படுகின்ற முத்தியின் மாட்சிமையும், அதிபதி - அரசனே, கேள் - யாம் கூறக்கேட்பாய், என்று அருந்தவன் சொன்னான் - என்று அரிய தவமிக்க அத்துறவி கூறினான், (எ - று.) கதியும் துப்பும் வினையும் வினைவெல்வகையும் வீட்டது மாண்பும் கேள் என்று அருந்தவன் கூறினன் என்க. | (810) | | |
|
|