இதுவுமது

1922. நரகர் விலங்கு 1மனிதர்நற் றேவர்
விரவி னவர்தம் விகற்ப முரைப்பின்
பெருகு 2முரையென்று பெய்ம்மலர்த் தாரோன்
உருக வொருவா றுறுவ னுரைத்தான்.
 
     (இ - ள்.) நரகர் விலங்கு மனிதர் நல்தேவர் - நரகரும் விலங்குகளும் மனிதர்களும்
நல்லதேவர்களும் என்னும் அந்நாற்கதியுள்ளும், விரவினவர்தம் - கலந்தவருடைய, விகற்பம்
உரைப்பின் - வேற்றுமைகளை விரித்துக் கூறப்புகின், உரைபெருகும் என்று - மொழிகள்
மிகையாக விரியும் என்று கருதி, பெய்ம் மலர்த்தாரோன் உருக - பெய்யப்பட்ட மலர்
மாலையணிந்த பயாபதி மன்னன் உள்ளம் இன்பத்தாலே நெகிழ்ந்துருகும்படி, ஒருவாறு -
சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் ஒரு வழியானே, உறுவன் - அத்துறவி, உரைத்தான் -
கூறினான், (எ - று.)

      உறுவன், உரைப்பிற் பெருகுமென்று தாரோன் உருக ஒருவாறு உரைத்தான், என்க.

(812)