1928. குழிபடு கும்பிக் கருவாய் பெருகி
அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால்
வழுவி யனல்படு பாறைக்கண் 1வைகிப்
புழுவி னுருள்வ பொரிவ பொடிவ.
 
     (இ - ள்.) குழிபடு கும்பி - குழியில் நிறைந்துள்ள கும்பியின், கருவாய் பெருகி -
பிறப்பின் வாயிலாய்ப் புகுந்து நிறைந்துள்ள, அழுகல் உடம்பு இவை - அழுகிய
உடம்பையுடைய இவ்வுயிர்கள், அங்கு நிறைந்தால்- அக்குழி யிடமிலாதபடி
நிறைந்தவிடத்தே, வழுவி - அவற்றினின்றும் விலகி, அனல்படு பாறைக்கண் வைகி -
நெருப்புடைய பாறைக்கற்களின் மேலே தங்கி, புழுவின் - புழுக்களைப்போன்று, பொரிவ -
பொரிந்து வருந்து வனவும், பொடிவ - துகளாய்ப் போவனவும் ஆம், (எ - று.)

     அக் கும்பிகளிடமில்லாதபடி அவ்வுயிர்கள் நிறைந்துவிட்டால், பின்னர் நெருப்புப்
பாறைகளின்மேற் றங்கி புழுக்களைப் போன்று உருண்டும் பொரிந்தும் பொடிவனவாம்
என்க.

(818)