1930. அந்தோ வறனே யெனவழைப் பார்களை
வந்தோ மெனச்சொல்லி வாங்கு பவரில்லை
வெந்தே விளிந்து மொழியார் விழுந்துயர்
ழுந்தே 1வினைய முயன்றனர் புக்கார்.
 
     (இ - ள்.) அந்தோ அறனே என அழைப்பார்களை - ஐயகோ இஃது அறமோ என்று
தம் துயர் தவிர்க்கும்படி கூவி ஓலமிடுகின்ற அந் நரகர்களை, வந்தோம் எனச்சொல்லி -
வருந்தற்க இதோ நும்மைக் காப்பாற்ற வந்துள்ளேம் என ஆறுதல் கூறி, வாங்குபவர்
இல்லை - தம்மை எடுப்பாரையும் இலராய், வெந்தே - அத்தீயிற் கிடந்து வெந்தும்,
விளிந்தும் ஒழியார் - இறந்தொழிவாருமல்லர், முந்தே விழுத்துயர் இனைய முயன்றனர்
புக்கார் - அவர்கள் யார் எனில் முன்பிறவிகளிலே பெருந்துயர் இவை போல்வனவற்றைப
பிற உயிர்க்கு முயன்று செய்து அத்தீவினையால் இந்நரகத்தே புகுந்தவர்கள், (எ - று.)

     அந்நரகத்தே கிடந்து வருந்துபவர் துயரம் பொறாது அந்தோ அறனே என்று
அழைக்குமிடத்தும் அவர்க்குப் புகலாவார் ஒருவரையும் பெறாராய் வேகாநிற்பர்;
இறந்தொழிவாருமல்லர். இவ்வாறு வருந்துவார் யாரெனில் முற்பிறவிகளிலே பிறவுயிர்கட்கு
இன்னா செய்தார் என்க.

(820)