1934. மேயப் பருவம் விரும்பிய மீனினம்
காயப் பெருந்தடி காண்மி 1னிவையெனத்
தீயைப் பருகிய செப்புத் திரளவை
வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார்.
 
     (இ - ள்.) மேய அப்பருவம் விரும்பிய மீன் இனம் - நும்மொடு பொருந்தி நின்ற
அவ்விளம் பருவத்திலே நும்மால் விரும்பப்பட்ட மீனினங்களின், காயப் பெருந்தடி இவை
காண்மின் என - உடலிலுள்ள பெரிய ஊன் திளராகிய இவற்றைக் காணுங்கோள் என்று
காட்டி, தீயைப்பருகிய செம்புத் திரளவை - தீயுண்ட செம்புருக்குத் திரள்களை, வாயைப்
பெருகப் பிளந்து - இந்நரகர்களின் வாய்களை அகல விரியச்செய்து, மடுப்பார்,
அவ்வாயினுள் செலுத்தா நிற்பர், (எ - று.)

     மேய அப்பருவம் - மேயப்பருவம் என விகாரமெய்திற்று.

     நரகர்களே! நீயிர் விரும்பியுண்ணும் மீனினங்களின் உடற்றசைகள் இவை காண்மின்
என்று கூறி, உருக்கிய செப்புத்திரளை அவர் வாயிடத்தே மடுப்பர் என்க.

(824)