1935. மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்தும்
கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
ஒறுப்பர் சிலரை யவரு மொருபால்.
 
     (இ - ள்.) பல கறி வெஃகி - பல்வேறு இறைச்சிகளையும் உண்ண விரும்பி,
பலமறிகொன்றும் - பற்பல ஆடுகளைக்கொன்றும், மடப்பிணை வீழ்த்தும் - இளமையுடைய
பெண் மான்களை வதைத்தும், கறித்தவர்தம்மை - தின்றவர்களை, உறுப்பு உறுப்பாக
அரிந்து அரிந்து ஊட்டி - கை கால் முதலிய உறுப்புக்களை ஒவ்வொன்றாக அரிந்து
அவற்றைத் தின்னும்படி செய்து, சிலரை - அவருட் சிற்சிலரைத் துன்புறுத்தா நிற்பர்,
அவரும் ஒருபால் - அத்தகையோரும் ஒருசார் உளராவர், (எ - று.)

     மான் ஆடு முதலியவற்றைக் கொன்று அவையிற்றின் இறைச்சியை விரும்பித்
தின்றோரை, அவருடற்றசையை அரிந்து அவர் வாயினூட்டித் தின்னுக என ஒறுப்பர் என்க.

(825)