1939. பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப
மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர்
கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே
விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே.
 
     (இ - ள்.) பழு பல பற்றிப் பறிப்பர் - பலருடைய பழுவெலும்புகளைக்
குறட்டாற்பற்றிப் பறிப்பார், மழுப்பல கொண்டு பதைப்ப அவர் மார்பம் பிளப்பர் -
கோடரிகளைக் கைக்கொண்டு உடல் துடிக்கும்படி அந்நரகருடைய மார்பினைப் பிளப்பார்,
கழுப்பல ஏற்றிக் கடிதே அகைப்பர் - பலவாகிய கழு மரங்களிலே ஏற்றிக் கடுமையாக
அழுத்துவர், விழுப்பெரும் பூணோய் - சிறந்த பெரிய அணிகலன்களையுடைய அரசே,
வினையின் விளைவே - இவையெல்லாம் அவ்வவர் முன் செய்த தீவினைகளின் பயன்
என்று அறிக, (எ - று.)

     பறிப்பர் பிளப்பர் அகைப்பர் இவை அவர்செய்த வினையின் பயன் என்றான் என்க.

(829)