முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி
அமரச் செய்தல்
194. பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்.
 

     (இ - ள்.) அவர் - அந்தச் சமணமுனிவர்கள்; பாசு இடைப்பரப்பு உடைப்பழனம்
நாடனை - பயிர் மிகுதியினால் பசுமையான நடுவிடங்களை யுடைய கழனிகள் சூழ்ந்த
நாட்டையுடையவனான சுவலனசடியரசனை; ஆசிடை கொடுத்து - வாழ்த்துக்கூறி; இருக்க
என்றலும் - நீயிருக்கக்கடவாய் என்று கூறியருளுதலும், ஏசு இடை இலாதவன் -
குற்றமில்லாதவனான அரசன்; தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர - அரையிலுடுத்த
வுடையைச் சூழ்ந்ததான மணிகள் பதித்துச் செய்யப்பட்ட மேகலையை உடைய
தன்மனைவியர் தன்னைச் சூழ்ந்திருக்க; இருக்கை எய்தினான் - தான்
அமர்ந்திருக்கலானான், (எ - று.)

     முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி இருக்குமாறு பணித்தார்கள். பெண்கள்
தன்னைச் சூழ்ந்திருக்க அரசன் அமர்ந்தனன். இருக்கவியங்கோள். “இருக்கை யெய்தினான்“
அரசன் தான் அமர்ந்திருக்கத் தக்க இடத்தை யடைந்து அமர்ந்தான். பாசிடை - பசுமை
இடை; பண்புப் பகுதி ஈறுபோய் ஆதிநீண்டது. ஆசிடை கொடுத்து - ஆசீர்வதித்து, ஏசு
இடை இலாதவன் - பழித்தற்கு இடமில்லாதவன். ஈற்றடி முற்றும் மோனையாக
அமைந்துள்ளது.
 

( 76 )