1940. பறிப்பர் பலரவர் கைகளைப் பற்றிச்
செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி
நெறிப்ப ரெலும்பு நிரந்துடன் வீழ
மறிப்பர் மலைமிசை மற்று மொருசார்.
 
     (இ - ள்.) பலர் அவர் கைகளைப் பற்றி பறிப்பர் - பலர் அந்நரகர் கைகளைப்
பிடித்து முறித்துப் பறிப்பார், விரல்களைச் செறிப்பர் - விரல்களை அழுத்தி நசுக்குவர்,
மேனி சீவுவர் - உடலின் கண்ணுள்ள தசையினை வாளாலே அரிவர், எலும்பு நெறிப்பார் -
எலும்புகளை முறிப்பார், மற்றும் ஒருசார் - மேலும் ஒரு பக்கத்தே, நிரந்து உடன் வீழ -
ஒருவர் பின் ஒருவர் நிரலாக வீழும்படி, மலைமிசை மறிப்பர் - மலையின் உச்சியிலிருந்து
உருட்டுவர், (எ - று.)

     கரங்களைப் பற்றி இழுப்பவர், விரல்களை நசுக்குபவர், உடம்பைப் பிளப்பவர்,
எலும்பை முறிப்பவர், மலையிலிருந்து உருட்டுவோர் ஒருபால் இருந்தனர் என்க.

(830)