(இ - ள்.) முல்லை முகை மலர்த்தாரோய் - முல்லை மலர் மாலையை அணிந்த வேந்தனே, முதற்புரை அல்லல் - நரகத்தின் முதலாவதாகிய இப்பேரிருளில் உழப்பனவாகிய இன்னோரன்ன இன்னல்கள், எனைப்பல ஆயிரகோடிகள் - எத்துணைவகையாகவும் பல்லாயிரக்கோடிகளாகவும், எல்லையில் துன்பம் - முடிவற்ற துயரந்தருவனவாம், கீழ்க்கீழ் புரைபுரை தோறும் - நிரலே இரண்டாம் புரைமுதலாக அடுத்தடுத்துக் கீழே உள்ளனவாகிய புரைகள் தோறும், இவற்றின் இருமடி புல்லினர் - இவையிற்றைப் போன்று ஒவ்வொன்றினும் இவ்விரண்டு மடங்கு பெருக நுகர்வர், (எ - று.) தாரோய்! நரகத்தின் முதற்புரையின்கண் உள்ளோர் அல்லல்கள் இவை போல்வன எண்ணிறந்தனவாம், கீழ்க்கீழ் நரகங்களின் அவ்வின்னல் மிகும் என்றார் என்க. |