(இ - ள்.) பெய்யா அருநஞ்சும் - பிறராற் பெய்யப்படாது இயல்பின் உளவாகிய நச்சுப்பொய்கைகளும், பேர் அழல் குட்டமும் - பெரிய தீக்குழிகளும், செய்யாக் குழிகளும் - இயல்பானுளவாகிய கும்பிக்குழிகளும், சீநீர்த் தடங்களும் - சீழே நீராய் நிறைந்த குளங்களுமாகிய, நையா நரகர் இடம் இவை - துயரத்தாலே உடலும் உளமும் நையும் நரகர் வதியும் இவ்விடங்களின், நாறினும் - தீநாற்றம் பட்டாலும், ஓசனைக்கண்ணே - நான்கு காவதத்தொலைவின்கண் உள்ள, பிறவுயிர் - இந்நரகரல்லாத ஏனைய உயிர்கள், உய்யா - உயிர்த்திரா (இறக்கும் என்றபடி) நாறினும் என்ற வும்மை, சிறப்பும்மை. நஞ்சும் அழற்குட்டமும் சீழ்த்தடங்களும் ஆகிய இந்நரகத்தின் நாற்றத்தை ஒரு யோசனைத் தொலைவிடத்தே நின்று நுகரினும் ஏனைய உயிர்கள் இறந்துபடும் என்க. அந்நாற்றத்தின் மிகுதியும் கொடுமையும் கூறியவாறு. |