1946. எழுவின் முழமூன் றறுவிர லென்ப
வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார்
ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன்
முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே.
 
     (இ - ள்.) வழுவின் முதல் வாழ்வார் - குற்றமள்ள முதல் நரகத்தின் வாழ்வோருடைய
உடலின் உயரத்திற்குப் பேரெல்லை, எழுவில் முழ மூன்று அறுவிரல் என்ப - ஏழுவில்
மூன்று முழம் ஆறுவிரல் என்று கூறுவர்; அதன் கீழ்ப்புரை வாழ்வார் -
அக்கடைசி நரகத்தில் உள்ள ஒற்றைப்புரையில் வாழும் நரகர் உடல் உயரத்தின்
பேரெல்லை, முழுவில் ஐஞ்நூறு - ஐந்நூறுவில் என்று கூறுவர், ஒழிவில ஓசனை ஏழ்மேல்
பொங்குவர் - இவற்றுள் முதல் நரகத்தினர் இடையறாதனவாகிய ஏழுயோசனை உயரம்
வானத்தே இயங்கி உயர்வர், மூக்காவதம் - கீழ்நரகத்தினர் முக்காவத உயரம் இயங்கி
உயர்வர், (எ - று.)

     முதலதன்கண் வாழ்வார் உயரம் ஏழுவில் மூன்றுமுழம் ஆறுவிரல், இறுதி நரகில்
வாழ்வார் உயரம் ஐந்நூறுவில், முதல் நரகின் உயரம் ஏழுயோசனை கீழ்நரகின் உயரம்
முக்காவதம், என்றவாறு. இங்ஙனம் கொண்டுகூட்டிப் பொருள் கூறாதவிடத்து இது மற்றை
நூல்களோடு முரணுகின்றது; ஆகலின் மற்றை நூலோடு பொருந்துமாறு இங்ஙனம்
கூறினோம்.

(836)