வேறு
வரிப்பாட்டு


முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன்
வணங்குதல்

195. தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ 1வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்.
 

     (இ - ள்.) தாளுயர் தாமரைத் திருவும் - தண்டினால் உயர்ந்த செந்தாமரை மலரில்
வாழ்கின்ற திருமகளும், தண்கதிர் நீள்எழில் ஆரமும் - குளிர்ந்த ஒளிகளையுடைய
திங்கள்போல விளங்குகின்ற அழகிய முத்துமாலையும், நிழன்ற - தங்கிவிளங்கப்பெற்ற;
கண்குலாம் தோள்இணை - காண்போரின்கண்கள் மகிழ்தற்குக் காரணமான அழகிய
உன்தோள்கள் இரண்டும், செவ்வியோ என்ன - நன்மையாக இருக்கின்றனவோவென்று
கேட்க, சூழ்ஒளிவாளவன் - சுற்றிலும் ஒளிவீசுகின்ற வாட்படையையுடைய சுவலனசடியரசன்,
மணிமுடி வணங்கிவாழ்த்தினான் - தனது அழகிய தலையால் வணங்கி முனிவர்களைப்
போற்றினான், (எ - று.)

     அரசனுக்கு வாழ்த்துக்கூறிய முனிவர்கள் அரசனைப் பார்த்து, “உன் தோள்கள்
இனிதாக விளங்குகின்றனவோ?“ என்று கேட்க அரசன் தலைவணங்கி முனிவர்களைப்
போற்றினான் என்பதாம். திருவடிகளை வாழ்த்துவதைப்போல் தோள்களைக் குறித்து நலம்
வினாதலும் தலையால் வணங்கிப் பதிலுரைத்தலும் மரபு.

          “உரிமை தன்னொடும் வலங்கொண் டோங்குசீர்த்
          திரும கன்பணிந் திருப்பச் செய்தவர்
          இருநில மன்னற் கின்ப மேயெனப்
          பெருநில மன்னன் பெரிதும் வாழ்த்தினான்“

என்னும் சிந்தாமணியையும் ஈண்டு ஒப்பு நோக்குக. வணங்கி வாழ்த்துதல், தன்னாற்
பணியப் பெறுவார் எத்தகைய கேடு மற்றோராய் நீடு வாழவேண்டு மென்னும் ஆர்வத்தைப்
புலப்படுத்துவது.
 

( 77 )