விலங்குகதித் துன்பம்
விலங்குகளின் வகை

1956. விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும்
உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி
புலங்கொண்ட வைம்பொறி 2யீறாப் புணர்ந்த
நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ.
 
     இது முதல 15 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) விலங்குடன் சாதி - விலங்குகளினுடைய வகைகளை, விரிப்பிற் பெருகும் -
விரித்துரைக்கப் புகுவேமாயின், அதுமிகப் பெருகா நிற்கும் (ஆதலிற் சுருக்கமாகக்
கூறுவோம்), உலங்கொண்டதோள் மன்ன - உலக்கல்லை யொத்த தோளையுடைய
அரசனே, ஓர் அறிவு ஆதி ஐம்பொறி யீறாப்புணர்ந்த - அவை ஒன்றறிவுயிர் முதல் ஐந்து
பொறியான் அறியும் ஐந்தறிவுயிர் இறுதியாகத் தொகைப்படுவனவாம், நலங்கொண்ட
ஞாலத்தின் - அழகிய உலகினிடத்தே, நீ நாடி உணர் - நீயே ஆராய்ந்து அறிந்துகொள்க,
(எ - று,)

     “ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
     இரண்டறி வதுவே யதனொடு நாவே
     மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
     நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
     ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
     ஆறறி வதுவே யவற்றொடு மனனே
     நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.Ó

     (தொல் - பொ. மரபியல் - 27)

     ஐயறிவுடையோர் மானிடருள்ளும் உளர் எனினும் அவரையும் விலங்கெனவேகொள்க.

( 846 )