இதுவுமது

1958. ஓரறி வாகி யுழக்கு முயிர்களைப்
பேரறி வாரும் பிறரில்லை யின்னவை
யாரறி வாரழி யுந்திறம் யாதெனில்
கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார்.

     (இ - ள்.) ஓர் அறிவாகி உழக்கும் உயிர்களைப் பேர் அறிவாரும் பிறரில்லை -
ஒன்றறி உயிராய்ப்பிறந்து துன்புறும் புல்லும் மரமும் செடியும் கொடியும் பிறவுமாய
இவையிற்றின் பெயர்களைத்தாமும் முழுதும் அறிவார் யாரும் உலகின் இல்லை, இன்னவை
யார் அறிவார் - இவற்றை யாரே தான் அறிய வல்லுநர், அழியும் திறம் யாது எனில் -
இவை எவ்வாற்றான் அழிவெய்துவனவோ என்று வினவில், கூர் அறிவு இல்லவர்
கொன்றிடுகின்றார் - இவையும் உயிர் இனமே என்றறியும் கூர்த்தமதியில்லாப் பேதைகள்
இவற்றை அழித்துவிடுகின்றனர், (எ - று.)

     புல் மர முதலிய ஒன்றறி உயிர்களின் விகற்பங்கள் எண்ணில, அவற்றின் பெயர்
அறிதலும் இயலாது, இவையிற்றை அறிவில்லவர் கொன்றழிப்பர், என்க.

  (848)