1960. ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள்
ஆனை முதலா வளிய விலங்குகள்
3மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
ஊனெய் யுருகு முழக்கு மொருபால்.

     (இ - ள்.) ஏனை ஒழிந்த இயங்கு நற்சாதியுள் - புல் முதலிய நிலையியற் பிறப்பின்
வேறாய் எஞ்சிய இயங்கு இயற் பிறப்பாகிய நல்ல வகையினவாகிய, ஆனை முதலா அளிய
விலங்குகள் - யானை முதலிய இரங்கத்தக்க விலங்குகளும், மானிடர் பற்றி வலிந்து
நலிந்திட - மனிதர்கள் வலிந்து பிடித்துத் துன்புறுத்தா நிற்ப, ஊன் நெய் உருகும் -
தம்முடலின் ஊன்கள் நெய்யாய் உருகுவனவாய், உழக்கும் ஒருபால் - துன்பமுழப்பனவாம்
ஒரு பக்கத்தே, (எ - று.)

     இரண்டறி வுயிர் முதலிய இயங்கியற் பிறவிகள் கொடிய மானிடர் பற்றி நலிய உருகித்
துன்புழக்கும் என்க

(850)