1961. ஊர்ந்து முழுது முறுபார மேந்தியும்
சாய்ந்த விலங்குக டாளுடைந் தாழ்தர
வீர்ந்து 1மறுத்து மிறைச்சி யுவப்பவர்
தேர்ந்து செகுப்பவுந் தேயுஞ் சிலவே.
 
     (இ - ள்.) ஊர்ந்தும் - ஒருசார் ஊர்திகளாய்க் கொண்டு மனிதர்கள் தம்மேலிருந்து
செலுத்தலாலும், உழுதும் - உழுதொழில் செய்தலாலும், உறு பாரம் ஏந்தியும் - மிகையாய
சுமைகளைச் சுமத்தலாலும், சாய்ந்த விலங்குகள் - ஆற்றாது இளைத்து வீழ்ந்த விலங்குகள்,
தாள் உடைந்து - கால் என்புகள் முறிந்து, ஆழ்தர - துன்பத்துள்ளே அழுந்தா நிற்ப,
ஈர்ந்தும் அறுத்தும் - பிளந்தும் அரிந்தும், இறைச்சி உவப்பவர் - தம்மிறைச்சியைத் தின்று
மகிழும் மனிதர்கள், தேர்ந்து - பருவத்தை ஆராய்ந்து, செகுப்பவும் - கொல்லா நிற்பவும்,
தேயும் சில - சில விலங்குகள் அழிந்தொழியும், (எ - று.)

     ஊர்ந்தும் பாரமேந்தியும் விலங்குகள் தாள் உடைந்து இன்னலுறும், மேலும் இறைச்சி
தின்போர் அவையிற்றை அரிந்தும் அறுத்தும் செகுப்பவும் தேயும் என்க.

(851)