1962. தடிவிலை வாழ்நர் தடிந்திடப் பட்டு
முடிவலை வாழ்நர் முருக்க முரிந்தும்
கொடுவி 2லெயினர்கள் கொல்லக் குறைந்தும்
விடலில வேதனை வேந்த விலங்கே.
 
     (இ - ள்.) தடிவிலை வாழ்நர் - ஊன்விற்றுப் பிழைப்போரால், தடிந்திடப்பட்டும் -
கொல்லப்பட்டும், முடிவலை வாழ்நர் - முடிதற் றொழிலையுடைய வலையாலே
வாழ்கின்றவராகிய பரதவர் முதலியோரால், முருக்க முரிந்தும் - கொல்லப்பட்டிறந்தும்,
கொடுவில் எயினர்கள் - வளைந்த வில்லையுடைய வேடர்கள், கொல்லக்குறைந்தும் -
கொல்லுதலாலே அழிந்தும், வேதனைவிடல் இல - துயரத்தை ஒழியமாட்டா, விலங்கே -
விலங்குகள், வேந்தே -அரசனே, (எ - று.)
    அரசனே அவ்வுயிர்கள் தடிந்திடப்பட்டும் முருக்கமுரிந்தும் கொல்லக் குறைந்தும்
வேதனை விடலில என்றார் என்க.

( 852 )