1963. அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும்
நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு
வந்தோ மெனநின்ற 1மாண்புடை யார்களும்
உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார்.
 
      (இ - ள்.) அந்தோ அளிய விலங்குகள் - ஐயகோ! அளிக்கத்தக்க அவ்வெளிய
விலங்கினங்கள், யார் கண்ணும் - எத்திறத்தோரிடத்தும், நொந்தோம் எனச் சென்று -
துன்புற்றோம் என்று கருதிச்சென்று, நோக்கின் - அவர் தமக்கு இரங்குவார் என
நோக்கியவிடத்தும், நுனிப்பொடு - ஆராய்ச்சி அறிவோடே, உய்ந்து வந்தோம் எனநின்ற -
தீவிைனைகளிற் றப்பி உயர்ந்து வந்தோம் என்று தம்மை எண்ணி நின்ற,
மாண்புடையோரும் - சான்றோரும், ஓய்ந்து ஒழிய - அவ்விலங்குகள் உடல் தளர்ந்து
சாகும்படி, முயன்றிடுகின்றார் - தொழில் செய்விக்க முயலா நின்றனர், (எ - று.)

     அறிவுடையோரும் விலங்கினங்களை வருத்துதல் ஒழிகிலர் என்று துறவி இரங்கினர்
என்க.

(853)