அவையிற்றின் துயரங்கட்கு அம்முனிவர் இரங்குதல்

1964. கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி
துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர்
என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி
2மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ.
 
     (இ - ள்.) கன்னியர் வேட்கை - மகளிரை விழைதலாகிய காமத்துன்பங்களும், கடவுள்
அரும்பிணி - ஊழான் வருந் தவிர்த்தற்கரிய துன்பங்களும், துன்னிய துன்ப விலங்கின்
சுடுதுயர் - செறிந்த துன்பத்தையுடைய விலங்குப் பிறப்பின் எய்தும் சுடுவது போன்ற
இன்னல்களும், என்னும் இவற்றினை - என்று கூறப்படும் இத்துன்பங்களை, எம்போல்பவர்
அன்றி - எம்மைப் போன்ற வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனிவர் அல்லாமல்,
மன்ன - அரசே, அறிபவர் மற்று இல்லை - உணர்கின்றவர் பிறர் யாருமிலர், (எ - று.)
     எவ்வுயிர்கட்கும் செந்தண்மை பூண்டொழுகும் எம்மனோர்க்கே இத்துன்பங்கள்
உணரற்பாலன என்பதாம். பிறர் உணர்வாராயின் அவர் உடனே துறவின்கட் செல்வர்
என்றபடி.

( 854 )