1968. பொருளிடை மாயம் 3புணர்த்தும் பிறரை
மருளிக ளாக மயக்கு மவரும்
இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா
அருளி லவரு மவைநனி யாவார்.
 
     (இ - ள்.) பொருளிடை மாயம் புணர்த்தும் - நென்முதலிய பொருள்களை
அளவைகள் முதலியவற்றால் வஞ்சித்தும், பிறரை - அயலாரை, மருளிகள் ஆக - தம்
வஞ்சம் அறியாது மயங்கும்படி, மயக்கும் அவரும் - மயக்கி ஏமாற்றுபவரும், இருளுடைய
உள்ளமொடு - தீமை நிறைந்த நெஞ்சத்தோடே, ஏதங்கள் எண்ணா - பிறர் கேடுசூழும்,
அருள் இலவரும் - அருள் இல்லாத கயவரும், அவை நனி ஆவார் - அவ்விலங்குகளாய்
மிகவும் பிறப்பார், (எ - று.)

      பொருளிடை மாயம் புணர்த்தலாவது “கொள்வது மிகைகொண்டு கொடுப்பது
குறைகொடுத்தன்“ முதலியனவாம்.

(858)