தன் கருத்தையுணர்ந்து முனிவர்கூற அரசன் அவரைப்பணிதல்

197.

துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா
லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்
மன்னநின் 1மனத்துள தென்ன மாமணிக்
கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான்.
 

    (இ - ள்.) துன்னிய வினைப்பகை துணிக்கும் - பொருந்திய கருமங் களாகிய
பகைகளை அறுத்தொழிக்கின்ற, தொன்மைசால் இன்னுரை அமிழ்து - பழைமையான
பொருள் நிறைந்த இனிய மொழியாகிய அமிழ்தத்தை, எமக்கு ஈமின் என்பதாம் -
எங்கட்குக் கொடுத்தருளுங்கள் என்பதாம், மன்னநின் மனத்து உளது - அரசனே!
உன்னுடைய உள்ளத்தில் உள்ள எண்ணம், என்ன என்று முனிவரிற் பெரியவர்
இயம்புதலும், மாமணிக்கல் நவில் கடகக்கை - சிறந்த மாணிக்கக் கற்கள் பொருந்திய
கடகமென்னும் வளையை யணிந்த தன்கைகளை, கதழக்கூபபி்னான் - விரைவாகக் குவித்து
அரசன் வணங்கினான், (எ - று.)

தெரியப் படுத்திக்கொள்ள விரும்புவது ஒன்று இருக்கிறது என்ற அரசனைப் பார்த்து
முனிவர்களில் ஒருவர், “ஞானோபதேசமாகிய சொல்லமிழ் தத்தை எங்கட்குக்
கொடுத்தருளுங்கள் என்று கூறவேண்டும் என்னும் எண்ணம் உன்னுடைய உள்ளத்திலே
உள்ளது“ என்று அரசனுடைய உள்ளக்கருத்தை உணர்ந்து கூறினார். தனது உள்ளக்
கருத்தைத் தெய்விக ஞானத்தால் உணர்ந்து கூறிய முனிவரை அரசன் விரைவாகக்
கைகுவித்து வணங்கினான் என்க. அரசன் வணங்கியதனால் அவனுடைய எண்ணமும்
 அதுவே என்பது புலப்படும். எமக்கு என்றது அரசன் தன் மனைவி மக்களையும் சேர்த்துக்
கூறும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.

( 79 )