1970. இல்லை யுயிரென்று மில்லை பிறப்பென்றும்
நல்லன 1தீயன நாடி லிலவென்றும்
பல்லன சொல்லிப் படுத்துண்ணும் பாவிகள்
நில்லாது செல்வர் நிகோத கதியே.
 
     (இ - ள்.) உயிர் இல்லை என்றும் - உயிர் என்று ஒரு பொருள் இல்லை என்று
கூறியும், பிறப்பு இல்லை என்றும் - அவ்வுயிர் இறந்த பின்னர் மறுபிறப்பு அடைதல்,
இல்லை என்றும், நாடில் - ஆராயுமிடத்தே, நல்லன தீயன இல என்றும் - அறம்மறம்
என்பன இல்லை என்றும், பல்லன சொல்லி - இன்னோரன்னவாய் உலகத்தார்
உண்டென்பவற்றை இல்லை எனப்பற்பலவற்றை மொழிந்து, படுத்து உண்ணும் பாவிகள் -
உயிர்களைக் கொன்று தின்னாநின்ற மறச்செயலுடையோர், நில்லாது நிகோதகதி செல்வர் -
இறந்தவுடன் வேறியாண்டும் தாழ்த்தலின்றி இவ்விலங்குப் பிறவியிற்சென்று பிறவா நிற்பர்,
(எ - று.)

     உலகத்தார் உண்டென்பதில் லென்னும் அலகையை ஒப்போரும், படுத்துண்போரும்
நிகோத கதியிற் செல்வர் என்க.

(860)